சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.068   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாலங்காடு (பழையனூர்) - திருநேரிசை அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=TwKXKMpMV4I   Add audio link Add Audio

வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.

1
வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .

செந்தழல் உருவர் போலும்; சின விடை உடையர் போலும்;
வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
மந்தம் ஆம் பொழில் பழ(ந்)னை மல்கிய வள்ளல் போலும்;
அந்தம் இல் அடிகள் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

2
ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய் , கோபம் உடைய காளையை உடையவராய் , வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய் , தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதி யில்லாத பெருமானாய் உள்ளார் .

கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.

3
நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும் , பகைவருடைய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும் , பண்ணுக்கு ஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும் , சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார் .

காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
தூறு இடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்;
கூறு இடும் உருவர் போலும்; குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

4
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .

பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்-
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.

5
பழையனூரையடுத்த , பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய் , கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார் .
Go to top

வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்;
பாட்டின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார், அரவம் தன்னை;-ஆலங்காட்டு அடிகளாரே.

6
ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய் , முழாவின் ஒலி நீங்காததும் , பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார் .

தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்;
நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்;
கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

7
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங் கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய் , தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த , நம்மால் விரும்பப்படும் தலைவராய் , யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார் .

கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு
சூடினார், கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்;
பாடினார், சாம வேதம்; பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார், காளி காண; ஆலங்காட்டு அடிகளாரே.

8
பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார் .

வெற்று அரைச் சமணரோடு விலை உடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்;
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்;
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.

9
ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய் , விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞான முடையவராய் உள்ளார் .

மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்;
பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய
அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.

10
ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய் , பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய் , பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாலங்காடு (பழையனூர்)
1.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
4.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ள நீர்ச் சடையர் போலும்;
Tune - திருநேரிசை   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
Tune - திருத்தாண்டகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.052   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முத்தா! முத்தி தர வல்ல
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
11.002   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1   திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
Tune -   (திருவாலங்காடு (பழையனூர்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000