சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.036   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பழனம் - திருநேரிசை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=vEqnNJ_uXuY   Add audio link Add Audio

ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

1
திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும் , மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும் , கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார் .

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.

2
பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார் .

கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே

3
வீரராய் , மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டை யோட்டை ஏந்தி , அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய் , பகைவருடைய மும்மதில்களையும அம்பு எய்து அழித்த வேதியராய் , வேதம் ஓதும் நாவினராய் என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்து எம்பெருமான் அமைந்து உள்ளார் .

நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

4
பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார் .

ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.

5
எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான் , ஊழிகளாய் , ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய , சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார் .
Go to top

ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

6
பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து , காலனைத் தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின் , பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார் .

ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

7
சூரியன் , அக்கினி , சந்திரன் , பிரமன் , திருமால் , புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள் . இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள் . பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதி பாகராக உள்ளார் .

கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.

8
காலினாலே கூற்றுவனை உதைத்து , யானைத்தோலைப் போர்த்தியவராய் , அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான் , கடலில் தோன்றிய விடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய் , தோடு அணிந்த காதினராய் , வெண்ணிறமுடைய காளையினராய் , பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச் செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார் .

கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.

9
பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து , தம்மை வாழ்த்தும் அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார் .

குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.

10
அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை , அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் , காளையை வாகனமாக உடைய , உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான் , தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழனம்
1.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி
Tune - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மாலை பயில்கின்ற குயில்
Tune - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆடினார் ஒருவர் போலும்; அலர்
Tune - திருநேரிசை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
Tune - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் கடல் நஞ்சம்
Tune - திருத்தாண்டகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000