காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.
|
1
|
சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து , கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி , பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான் , மருதநிலத்தில் , மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார் . | |
முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே.
|
2
|
எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் , அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் , இடைமருதை இடங்கொண்டவராவர் . | |
கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால்
ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.
|
3
|
காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் , அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார் . | |
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம்,
பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும்
கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த
எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே.
|
4
|
அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட , இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய் , அதனினும் மேம்பட்டவராய் , நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய் , பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய் , அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய் , மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார் . | |
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த,
பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை;
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை-
ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
|
5
|
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர் , தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார் . | |
| Go to top |
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ,
முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து,
மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும்
ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.
|
6
|
புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி , கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார் . | |
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை;
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
|
7
|
இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை , பாம்பு , ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய் , பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய் , அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார் . | |
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த,
மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி,
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.
|
8
|
பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார் . | |
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.
|
9
|
பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை , கங்கை , வன்னி இலை , ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி , ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார் . | |
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.
|
10
|
கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து , மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார் . | |
| Go to top |