தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.
|
1
|
செழிப்பு மிக்கமறைக்காடனார் , யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார் . | |
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.
|
2
|
நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார் , தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த , முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய் , பிறைசூடிய எம் தலைவராய் , எலும்பு , பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் . | |
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
அகப்படுத்து! என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.
|
3
|
மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி , மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க , அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும் . | |
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
|
4
|
வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் , அவன் உடம்பில் இணைந்த பத்துத்தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார் . | |
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.
|
5
|
விரைவாகப் புட்பகவிமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி , ` இதுவும் ஒரு பண்டமா ? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன் ` என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும் . | |
| Go to top |
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன் என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.
|
6
|
ஒவ்வொரு நாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக் கொண்டு இலங்கையின்மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார் . | |
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.
|
7
|
முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான் , பத்து வாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார் . | |
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!
|
8
|
ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன . | |
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.
|
9
|
இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன் , நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து . தனக்குத் துணையாக உதவாத அறிவினால் , பெரும்பயன் தரும் திருவைந்தெழுத்தைத் தியானம் செய்யாது , கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக , இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார் . | |
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.
|
10
|
கங்காதேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில் , தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக , பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க , அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார் . அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும் . | |
| Go to top |