திருவதிகை வீரட்டானம் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது. அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும் , அழகிய புலித்தோல் ஆடையும் , வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும் , தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த , பகைவரோடு மாறுபடும் காளையும் , மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும் , திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப்போவதும் இல்லை .
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும் , நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி , பொன்போல் விளங்கும் , ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு , நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும் , காண்டற்கினிய கொக்கின் இறகும் , தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும் , பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதும் இல்லை
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை
தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும் , சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும் , மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதுமில்லை .
மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை,
குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும்,
இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
ஒருகையில் மான்குட்டி , ஒருகையில் மான் தோல் ஆடை , ஒருகையில் மழுப்படை , மற்றொரு கையில் பாம்பு , மற்றொருகையில் வீணை இவற்றை உடையவராய் , மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும் , வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும் , பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் , இடப்பாகமும் , நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும்,
நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,
அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும் , சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும் , எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும் , கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும் , முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.
கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும்,
விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும் , திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும் , பெருவிலையுடைய சங்கினாலாகிய காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும் , பார்வதி தங்குமிடமாகக்கொண்ட மார்பும் , நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்தும் , ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும் , இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும் , இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு , பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும் , ஆராய்ந்து , அறியமுடியாத கூத்தும் , மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும் , துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும் , யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும் , சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப் போவதும் இல்லை .
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய் , வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .