சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநெல்வாயில் அரத்துறை - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3  https://www.youtube.com/watch?v=ClMAJFSSalA  https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8   Add audio link Add Audio

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

1
மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , எம் தந்தை , ஈசன் , பெரியோன் , ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால் , ஏனையோர்க்குக் கைகூடாதது .

ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

2
சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது .

பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

3
மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல் வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது .

துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

4
பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று .

வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

5
மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே ! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது .
Go to top

உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

6
குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏத்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவ தில்லை ஆதலின் கை கூடாதது .

நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

7
அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலை கள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள் , நீல மணி போன்ற கண்டத்தினன் , நீறணிந்த சிவன் , என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது .

செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

8
கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை , செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார் .

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

9
மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , நுட்பமான நூல்களை அறிந் துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமே யன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது .

சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

10
Go to top

கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெல்வாயில் அரத்துறை
2.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
5.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
Tune - திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )
7.003   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கல்வாய் அகிலும் கதிர் மா
Tune - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group