நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.
|
1
|
ஊர்கள் தோறும் சென்று , பிச்சையேற்று உலகங் கள் போற்ற நல்குவதை உண்டு , முற்காலத்தே சுடலையில் மாதொரு பாகனாக நடனமாடவல்ல , நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவ பெருமான் , நுண்ணியன் . பேருருவினன் . தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் . நீர் , காற்று , முதலான ஐம்பூத வடிவினன் . | |
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.
|
2
|
பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும் , புகழ் நீடிய குயில்கள் கூவவும் , விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான் , இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து , மூவெயில்களைச் செற்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன் . இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான் . | |
சூடக முன்கை மங்கை ஒரு பாகம் ஆக, அருள்
காரணங்கள் வருவான்;
ஈடு அகம் ஆன நோக்கி, இடு பிச்சை கொண்டு, படு
பிச்சன் என்று பரவ,
தோடு அகம் ஆய் ஓர் காதும், ஒரு காது இலங்கு குழை
தாழ, வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி, மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன்
அவனே.
|
3
|
இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன் . பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று , மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த , இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன் . | |
சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
நறையூரில் நம்பன் அவனே.
|
4
|
தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற , சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறை வனாகிய அவன் , அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்ட வன் . எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி . சிவகதியாக நிற்கும் கடவுள் . என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன் . இருண்ட கண்டத்தினன் . தாயெனத் தலையளி செய்யும் தலைவன் . | |
நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
நம்பன் அவனே.
|
5
|
வாளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல் களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன் , சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் . எமக்குத் தலைவன் . நிறைந்த சோலை கள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் . அமரர்க்குத் தலைவன் . அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன் . பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன் . | |
| Go to top |
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.
|
6
|
அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன் . கங்கை தங்கிய முடி மீது வன்னி , கொன்றைமலர் முதலியன பொருந்திய சடையினை உடையவன் . வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங் கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன் . தன்னை அணுகிய வேதங் களின் ஓசை , அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன் . | |
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.
|
7
|
தேன் துளிக்கும் சோலைகளையும் , கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும் , வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வான ளாவிய , மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட , கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன் . விடம் பொருந்திய கண்டத்தினன் . | |
அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.
|
8
|
இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத்தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக்கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன் . அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன் . கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன் . | |
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.
|
9
|
சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்து தலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்ப னாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும் எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி , தீயாய் ஓங்கிய பெரியோன் , விளங்கும் சடைமுடியை உடையவன் . | |
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.
|
10
|
தவம் நிறைந்த பத்தர்கள் , சித்தர்கள் , மறை வல்லோர் விரும்பி வழிபடவும் , மாதர்கள் முறையாகப் பாடி அடைய வும் , நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன் , துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடை யோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன் . அவன் விளங்கும் சடைமுடி உடையோன் . | |
| Go to top |
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.
|
11
|
ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமை யில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடி களைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை , குற்ற மற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர் . | |