சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கடவூர் மயானம் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=5DoV13VV7ys  https://www.youtube.com/watch?v=oLtSekfKGMY   Add audio link Add Audio

வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

1
இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.

மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே

2
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

3
ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே

4
முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

5
வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம் பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.
Go to top

பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

6
பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

7
பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்கவரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை
போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

8
சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன்
ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

9
தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

10
தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப்புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.
Go to top

மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.

11
குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடவூர் மயானம்
2.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரிய மறையார், பிறையார், மலை
Tune - காந்தாரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
5.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழை கொள் காதினர், கோவண
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
7.053   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மரு ஆர் கொன்றை மதி
Tune - பழம்பஞ்சுரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000