நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.
|
1
|
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும். | |
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்,
வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்
தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.
|
2
|
பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும். | |
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு
ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,
தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.
|
3
|
மணம்வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும். | |
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி,
தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.
|
4
|
வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும். | |
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.
|
5
|
மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும். | |
| Go to top |
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்,
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.
|
6
|
உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும். | |
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,
ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில்
மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத்
தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.
|
7
|
வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னைமலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும். | |
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந்
தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.
|
8
|
தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும். | |
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.
|
9
|
திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும். | |
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,
பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.
|
10
|
அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும். | |
| Go to top |
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.
|
11
|
சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர்புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர். | |