| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/audio/2.037 chathuram maraithaan.mp3 https://www.youtube.com/watch?v=_NNuFxcpUok Add audio link
2.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருமறைக்காடு (வேதாரண்யம்) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!
1
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக.
சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?
2
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?
குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?
3
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ?
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?
4
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
5
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக் காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?
Go to top
பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!
உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?
6
பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ள வனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா!
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?
7
விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமாமறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா!
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த,
அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே?
8
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம்வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?
9
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?
10
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?
Go to top
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.
11
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர்தொழ வான்அடைவர்.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சிலை தனை நடு இடை
Tune - நட்டபாடை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
Tune - இந்தளம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோளறு பதிகம், வேய் உறு தோளி பங்கன்,
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) )
2.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
3.076
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் பொலி சுரத்தின் எரி
Tune - சாதாரி
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
Tune - திருநேரிசை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
Tune - திருநேரிசை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.009
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதம் மால் கடல் பரவி
Tune - திருக்குறுந்தொகை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
Tune - திருக்குறுந்தொகை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
6.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூண்டு சுடர் அனைய சோதி
Tune - திருத்தாண்டகம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
7.071
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
யாழைப் பழித் தன்ன மொழி
Tune - காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)