ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.
|
1
|
இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள், வன்னிஇலை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு, சுரபுன்னை முதலிய மரங்களின் மணம் வீசும் திருநள்ளாறு ஆகும். | |
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.
|
2
|
வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும் முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில் ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு ஆகும். | |
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.
|
3
|
விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும். | |
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.
|
4
|
திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும், வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான் திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிறகு அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர், சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர். | |
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர்
அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே.
|
5
|
மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத்தம் மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கியருள்பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில், அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம் திருநள்ளாறு. | |
| Go to top |
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.
|
6
|
மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும் வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர் நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறி நின்று நீராட்டி அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும். | |
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.
|
7
|
நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர். புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர். அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும். | |
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே.
|
8
|
சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும், வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம். வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப் பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும். | |
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.
|
9
|
உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால், உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும் அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும் அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு என்பர். | |
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.
|
10
|
மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம் என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும் விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில் முழங்கும் திருநள்ளாறு ஆகும். | |
| Go to top |
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.
|
11
|
ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில் வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப் பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா. | |