முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.
|
1
|
பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர்யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும். | |
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.
|
2
|
வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும் , தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும் . | |
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.
|
3
|
இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத் தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர். | |
மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.
|
4
|
கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும். | |
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.
|
5
|
முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும். | |
| Go to top |
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.
|
6
|
மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும். | |
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.
|
7
|
வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும். | |
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே.
|
8
|
பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும். | |
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.
|
9
|
காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும். | |
கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.
|
10
|
கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும். | |
| Go to top |
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.
|
11
|
செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர். | |