சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவலஞ்சுழி - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Sc0T0tKfZKo   Add audio link Add Audio

விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

1
மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

2
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பி னராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக்காரணம் யாதோ? சொல்வீராக.

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?

3
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

4
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.

கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

5
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.
Go to top

பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

6
நீர் பெருகி வரும் காவிரியில் பூசநன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.

கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

7
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.

தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

8
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டுயானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.

தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

9
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.

உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

10
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
Go to top

வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

11
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலஞ்சுழி
2.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்டு எலாம் மலர விரை
Tune - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
2.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
Tune - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
3.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பள்ளம் அது ஆய படர்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
5.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் ஆர் கடலின் விடம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் புனல் கங்கை
Tune - திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
11.011   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
Tune -   (திருவலஞ்சுழி )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000