நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை கூறு சேர்வது ஒர் கோலம் ஆய், பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர் சடை அண்ணலே.
|
1
|
திருப்பராய்த்துறையில் கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர் திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர். | |
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை, வந்த பூம்புனல், வைத்தவர் பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை அந்தம் இல்ல அடிகளே.
|
2
|
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர் மணங்கமழும் சிறந்த மலர்களும் கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர். | |
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து ஓத நின்ற ஒருவனார்; பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை ஆதி ஆய அடிகளே.
|
3
|
திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர் வேதங்களை அருளிச்செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப்பெண்ணுருவாக விளங்குபவர். | |
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு நூலும் தாம் அணி மார்பினர் பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை, ஆல நீழல் அடிகளே.
|
4
|
திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால் நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர் புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர். | |
விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்; இரவில் நின்று எரி ஆடுவர்; பரவினார் அவர் வேதம் பராய்த்துறை அரவம் ஆர்த்த அடிகளே.
|
5
|
திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர் திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர். | |
| Go to top |
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடையவர் பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை அறைய நின்ற அடிகளே.
|
6
|
பறை சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர் வேதங்களை ஓதுபவர். மான்கன்றைக் கையின்கண் உடையவர் விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர். | |
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில் கங்கை தரித்தவர்; படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே.
|
7
|
திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர் விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர். | |
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார், விரல் ஒன்றினால்; பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை அருக்கன் தன்னை, அடிகளே.
|
8
|
திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர் வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர். | |
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும் அறியாதவர்; பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை ஆற்றல் மிக்க அடிகளே.
|
9
|
திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள் மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன் திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப்பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர். | |
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள், உரு இலா உரை கொள்ளேலும்! பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை மருவினான் தனை வாழ்த்துமே!
|
10
|
புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும் சமணர்களாகிய கீழ்மக்களும் கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக. | |
| Go to top |
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல், சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், செல்வம் ஆம், இவை செப்பவே.
|
11
|
பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய வீடுபேறாகிய செல்வத்தையுடைய இறைவன்மீது அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால் ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும். | |