சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவீழிமிழலை - மேகராகக்குறிஞ்சி கவாம்போதி நீலாம்பரி காஞ்சனபௌலி ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=knCU4ih-2bI   Add audio link Add Audio

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

1
அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில் நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.

பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து
ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட
கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும்
இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலை ஆமே.

2
தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத் தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவ னாகிய சிவபிரான் உறையும் கோயில் செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும் தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இளஅன்னம் வயலில் விளையும் செந்நெற் கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.

எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து    நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.

3
வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில் உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில் செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும் தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும் ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

4
நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில் மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க ஆண்மயில்கள் பல நடனமாட வண்டுகள்பாட பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.

காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.

5
காண்டற்கரிய கடவுளாய் மூன்று காலங்களாய் மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி அயன் அரன் ஆகிய மும்மூர்த்திகளாய் பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில் மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய உத்தமனை வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பன போல அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.
Go to top

அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.

6
உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய் காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில் மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.

7
கங்கையணிந்த சடைமுடியை உடையவனும் மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும் இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும் கூத்தாடும் குணமுடையவனும் ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில் சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக்களிக்கும் திருவீழிமிழலையாகும்.

கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.

8
கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில் செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும் வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.

செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.

9
சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும் திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில் தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய் சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.

எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும்  நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.

10
எண்ணற்ற சமணர்களும் இழிதொழில் புரியும் சாக்கியர்களும் எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித்தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில் பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
Go to top

மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

11
மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும் செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாட வல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -   (திருவீழிமிழலை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000