சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.
|
1
|
விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும் காவி மலர்கள் கருங்குவளை மலர்கள் கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும். | |
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய
மலைச் செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்,
அமரர் தொழ, அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்
பாட்டு அயரும் கழுமலமே.
|
2
|
அகன்ற விழிகளையும் பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில் அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில் வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது. | |
அலங்கல் மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு,
ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய
மெய்யர் வாழ் கழுமலமே.
|
3
|
மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது. | |
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு எய்தும் கழுமலமே.
|
4
|
மண்ணுலக மக்களை வருத்தியும் தேவர்களை அஞ்சுமாறு செய்தும் வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும். | |
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.
|
5
|
ஊர்ந்து செல்லும் அரவு ஒளிவிடும் திங்கள் வன்னி ஊமத்த மலர் நீர்வடிவான கங்கை நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமலநகரில் உள்ளது. | |
| Go to top |
தரும் சரதம் தந்தருள்! என்று அடி நினைந்து,
தழல் அணைந்து, தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர்
தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப,
அது குடித்துக் களித்து வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய,
அகம் பாயும் கழுமலமே.
|
6
|
மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும். | |
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய்,
நிலன் ஐந்து ஆய் கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு
வாய், நின்றான்; அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேரப்
புள் இரியும் கழுமலமே.
|
7
|
மண் புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய் வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய்கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும் உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில் தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமலவளநகரில் உள்ளதாகும். | |
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர், இது நடவு ஒணா
வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்
கரை குவிக்கும் கழுமலமே.
|
8
|
வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும். | |
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா
வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள்
கொண்டு அணிந்து, பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து
நின்று, ஏத்தும் கழுமலமே.
|
9
|
திருமகளின் கேள்வனாகிய திருமாலும் நான் முகனும் பன்றி உருவம் எடுத்தும் அன்னப்பறவை வடிவமெடுத்தும் தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும். | |
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவம் ஆய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத
வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி,
இவை இசைய மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க,
மேல்படுக்கும் கழுமலமே.
|
10
|
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும் அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும் திருவிழாக்களின் ஓசையும் பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும். | |
| Go to top |
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.
|
11
|
கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல் நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப்பாடிய ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர். | |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|