காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,- தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்; வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்; பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.
|
1
|
பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர். | |
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை; பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு; எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும் வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.
|
2
|
கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர். | |
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது; தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்; ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன் இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.
|
3
|
இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர் அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற்பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர். | |
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை; எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை; செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல் விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.
|
4
|
பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர். | |
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின் மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான் தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.
|
5
|
வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும் உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று. | |
| Go to top |
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம் கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும், பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்; பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
|
6
|
தவமுனிவர்கள் பூக்களைத் தூவி கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர் கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர். | |
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு; மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச் சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே.
|
7
|
அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான் கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர். | |
நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின் கண், மருப்பு உருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர்; மா முருகன் விருப்பு உறு, பாம்புக்கு மெய், தந்தையார்; விறல் மா தவர் வாழ் பொருப்பு உறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே.
|
8
|
வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண் விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார். | |
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள், கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது; கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து; சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.
|
9
|
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத்தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர். | |
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்; கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்; பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்; கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.
|
10
|
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும் கறைக்கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன் முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும். | |
| Go to top |
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர், எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு, மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.
|
11
|
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர் கோவணம் உடுத்தவர். | |
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச் சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும் செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.
|
12
|
உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர். | |
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இருக்குக்குறள் பதிகம், அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொழிமாற்று பதிகம், காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏகபாதம் பதிகம், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வழிமொழி பதிகம், சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஈரடி பதிகம், வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாலை மாற்று பதிகம், யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|