சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே அங்கு இடு பலி கொளுமவன், கோபப் பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க எங்கும் மன், இராமன தீச்சரமே.
|
1
|
சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும் சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும் உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
சந்த நல்மலர் அணி தாழ்சடையன், தந்த மதத்தவன் தாதையோ தான், அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல எம் தவன், இராமன தீச்சரமே.
|
2
|
அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும் தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும் முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும் அழகனும் எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
தழை மயில் ஏறவன் தாதையோ தான், மழை பொதி சடையவன், மன்னு காதில் குழை அது விலங்கிய கோல மார்பின் இழையவன், இராமன தீச்சரமே.
|
3
|
தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும் காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும் அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனு மாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன், முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான், அத்திய கையினில் அழகு சூலம் வைத்தவன், இராமன தீச்சரமே.
|
4
|
சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம் மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும் தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்- தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப் பாய்ந்த கங்கையொடு பட அரவம் ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.
|
5
|
தலையில் தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல் அழகு தோய்ந்த இளம்பிறை பாய்ந்துவரும் கங்கை படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
| Go to top |
சரிகுழல் இலங்கிய தையல் காணும் பெரியவன், காளிதன் பெரிய கூத்தை அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும் எரியவன், இராமன தீச்சரமே.
|
6
|
பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும் காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய் நடனமாடுபவனும் அழகிய கையில் எரி ஏந்திவிளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி நீறு அது ஆடலோன், நீள்சடைமேல் ஆறு அது சூடுவான், அழகன், விடை ஏறவன், இராமன தீச்சரமே.
|
7
|
தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும் நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும் விடையின்மேல் ஏறிவருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன், பட அரவு ஆட்டிய படர் சடையன், நடம் அது ஆடலான், நால்மறைக்கும் இடமவன், இராமன தீச்சரமே.
|
8
|
பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும் படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும் விரிந்த சடைமுடியை உடையவனும் நடனம் புரிபவனும் நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம். | |
தனம் அணி தையல் தன் பாகன் தன்னை, அனம் அணி அயன் அணிமுடியும் காணான்; பன மணி அரவு அரி பாதம் காணான்; இன மணி இராமன தீச்சரமே.
|
9
|
அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும் அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன் திருவடியைக் காணாத படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும். | |
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்! அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்! மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை எறியவன், இராமன தீச்சரமே.
|
10
|
மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில் மணிகளோடு கூடிய கங்கை நதி அலை மோதுபவனாய் இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக. | |
| Go to top |
தேன் மலர்க் கொன்றை யோன்........ .
........ முந்தமக்கூனமன்றே.
|
11
|
தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன் . | |