சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமாற்பேறு - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=VuAmAPZ_kNI   Add audio link Add Audio

குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன், வள நகர் மாற்பேறே.

1
குருத்தாக தளிராக மொட்டு காய் ஆதியனவாக விளங்குபவனும் பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும் தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும் அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,
நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த
மாறு இலி வள நகர் மாற்பேறே.

2
பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும் தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர் மாற்பேறு.

கரு உடையார் உலகங்கள் வேவ,
செரு விடை ஏறி முன் சென்று நின்று,
உரு உடையாள் உமையாளும் தானும்
மருவிய வள நகர் மாற்பேறே.

3
பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும் போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

தலையவன், தலை அணிமாலை பூண்டு
கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான்,
கலை நவின்றான், கயிலாயம் என்னும்
மலையவன், வள நகர் மாற்பேறே.

4
எல்லோரினும் மேம்பட்டவனும் அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும் பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும் கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும்
பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன்,
கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற
மறையவன், வள நகர் மாற்பேறே.

5
பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும் பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும் பிறையணிந்த சடைமுடியனும் உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும் காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.
Go to top

பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக்
கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன்,
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.

6
பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும் தேவர்கள் அசுரர்கள் முனிவர்கள் மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

தீது இலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட,
ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே.

7
குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.

8
சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும் கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும் தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர் மாற்பேறாகும்.

குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும்
களித்து நன் கழல் அடி காணல் உறார்;
முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே.

9
குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும் பருத்த உடலினராகிய புத்தர்களும் களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே.

10
ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமாற்பேறு
1.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
Tune - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குருந்து அவன், குருகு அவன்,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
4.108   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
Tune - திருவிருத்தம்   (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
5.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் ஆற்றின் படை வேண்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
5.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏதும் ஒன்றும் அறிவு இலர்
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரானை; பாரினது பயன் ஆனானை;
Tune - திருத்தாண்டகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org