எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்; விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.
|
1
|
அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும் வேதங்களை அருளிச் செய்தவனும் அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும். | |
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத் தூயவன், தூ மதி சூடி, எல்லாம் ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும் சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.
|
2
|
உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும் தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும் தூய மதியை முடியில் சூடியவனும் எல்லாப் பொருள்களுமாக ஆனவனும் போகிகள் ஆன அமரர் மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும். | |
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய; போர்த்தவன், போதகத்தின் உரிவை; ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
3
|
மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும் யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண் கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும். | |
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்- மை, தவழ் திருமகள் வணங்க வைத்து, பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச் செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
4
|
அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும் பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும். | |
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி, தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
5
|
தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும். | |
| Go to top |
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால் உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று, விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
|
6
|
சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும் விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும். | |
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
|
7
|
இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும் அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும். | |
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய அரியவன்; அருமறை அங்கம் ஆனான்; கரியவன், நான்முகன், காண ஒண்ணாத் தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
8
|
எல்லோரினும் பெரியவனும் அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும் அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும் திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும். | |
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள், குன்றிய அற உரை கூறா வண்ணம் வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும் சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.
|
9
|
கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு ஐம்புலன் களையும் வென்றவனும் எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும். | |
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று, நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.
|
10
|
கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர். | |
| Go to top |