இன்குரல் இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் பொன் கரை பொரு பழங்காவிரியின் தென் கரை மருவிய சிவபுரமே.
|
1
|
இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரலு மாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர் அழகிய கரையினை மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும். | |
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப் பொன்றிட உதை செய்த புனிதன் நகர் வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே.
|
2
|
முற்காலத்தில் மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனது நகர் தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும் வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால் முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்ததலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு அவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.) | |
மலைமகள் மறுகிட, மதகரியைக் கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.
|
3
|
மலைமகளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர் அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும். | |
மண், புனல், அனலொடு, மாருதமும், விண், புனை மருவிய விகிர்தன் நகர் பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச் செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.
|
4
|
மண் புனல் அனல் காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர் பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். | |
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்- நாறு நன் குர விரி வண்டு கெண்டித் தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.
|
5
|
அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவபிரானது குளிர்ந்த நகரம் மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும். | |
| Go to top |
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, நீறு அது ஆக்கிய நிமலன் நகர் நாறு உடை நடுபவர் உழவரொடும் சேறு உடை வயல் அணி சிவபுரமே.
|
6
|
பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர் உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும். | |
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்- வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்- சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.
|
7
|
பசுவிடம் உண்டாகும் பால் தயிர் முதலிய ஐந்து பொருள்களை விரும்புபவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன் இருக்கின்ற பெரிய நகர் தேனுண்ண வண்டுகள் மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச் சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி மகிழும் அழகுடைய சிவபுரமாகும். | |
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன் முழுவலி அடக்கிய முதல்வன் நகர் விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து, செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.
|
8
|
அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர் விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும். | |
சங்கு அளவிய கையன், சதுர்முகனும், அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்- கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே.
|
9
|
சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர் இரவிலும் பறவைகள் கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும். | |
மண்டையின், குண்டிகை, மாசு தரும், மிண்டரை விலக்கிய விமலன் நகர்- பண்டு அமர்தரு பழங்காவிரியின் தெண்திரை பொருது எழு சிவபுரமே.
|
10
|
உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்திய வராய் மாசேறிய உடலினராய்த் தருக்கொடுதிரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர் பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும். | |
| Go to top |
சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன்- தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே.
|
11
|
சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரநகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓதவல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதிசேர்வர். | |