சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கடைமுடி (கீழையூர்) - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு அபிராமியம்பிகை உடனுறை அருள்மிகு கடைமுடியீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=-yJGrUCvJdM   Add audio link Add Audio

அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

1
வேதப் பொருளாய் விளங்குபவனும் அறவடிவின னும் அமுதம்போல இனியவனும் மூத்தவனும் இளையோனும் உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும் ஆகிய பெரு மான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.

திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே.

2
ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும் இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம் அலைகளோடு நுரைகள் பொருந் திய தெளிந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.

ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,
கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏல நல்மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே.

3
கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும் அழகிய திருவெண்ணீற்றுடனும் நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.

கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார்
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்,
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே.

4
கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம்பொருந்திய கண்டத்தை உடையவனாய் படம் பொருந்திய பாம்பையும் மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.

மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,
பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம்-
கறையவன் வள நகர் கடைமுடியே.

5
வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களும் ஆகியவனும் மாயை வடிவினனும் சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும் கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.
Go to top

பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை
மடவரலாளை ஒர்பாகம் வைத்து,
குடதிசை மதி அது சூடு சென்னிக்
கடவுள் தன் வள நகர் கடைமுடியே.

6
அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.

பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,
அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே.

7
திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய் திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.

நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்
சாதல் செய்து, அவன், அடி சரண்! எனலும்,
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே.

8
இராவணனைத் துன்புறுமாறு செய்து அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.

அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி, அருள்! என்று போற்று இசைப்ப,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி; அதன் அயல் காவிரியே.

9
அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.

மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;
எண்ணியகால், அவை இன்பம் அல்ல;
ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த
கண்ணுதல் வள நகர் கடைமுடியே.

10
நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடி யாகும்.
Go to top

பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

11
பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடைமுடி (கீழையூர்)
1.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000