தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும் நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும் காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
1
|
ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத் தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும். | |
கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு; குறள் ஆமை பூண வல்லான்; புரிசடைமேல் ஒர் புனல், கொன்றை, பேண வல்லான்; பெண் மகள் தன்னை ஒருபாகம் காண வல்லான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
2
|
திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும். | |
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை- தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
3
|
தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி வானகத்தவரும் வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம். | |
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம் இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
4
|
வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும் பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும் தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும். | |
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
5
|
நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும் வெண்பிறையையும் விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும் விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும் மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும். | |
| Go to top |
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர் உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.
|
6
|
விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும் தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும். | |
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின் நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி; பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
7
|
அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி அவனை நோதல் செய்தவனும் பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும். | |
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும், தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம் மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக் கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
8
|
அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும் அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும் தொடர்ந்த பெருமானாய் தூய மதியை முடியிற் சூடியவன் மலைமகளின் தலைவன் வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும். | |
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர் காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.
|
9
|
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும் பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும் பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும் வலிய சமண் குண்டர்களும் புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும். | |
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை, நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
|
10
|
நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர். | |
| Go to top |