சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சிராப்பள்ளி - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி

சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம்
- Hide Meaning   https://sivaya.org/audio/1.098 Nantruudayanai.mp3  https://sivaya.org/audio/1.098 nandurudaiyanai.mp3  https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY   Add audio link Add Audio

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

1
நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை தீயது ஒன்றேனும் இல்லாதவனை மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை பார்வதியை ஒரு பாகமாக உடையவனை அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?

2
சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?

மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

3
மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும் விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி,
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!

4
பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்!
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?

5
கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?
Go to top

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

6
எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!

7
கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார் பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன்
தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

8
மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய் இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

9
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

10
நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும் காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
Go to top

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

11
தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சிராப்பள்ளி
1.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நன்று உடையானை, தீயது இலானை,
Tune - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
5.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
Tune - திருக்குறுந்தொகை   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000