மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை அன்னியூர் அமர் மன்னுசோதியே.
|
1
|
திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன் பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன். | |
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க் குழகன், சேவடி தொழுது வாழ்மினே!
|
2
|
இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக. | |
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!
|
3
|
நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக. | |
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.
|
4
|
இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர். | |
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!
|
5
|
மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக. | |
| Go to top |
இன்பம் வேண்டுவீர்! அன்பன், அன்னியூர் நன்பொன் என்னுமின், உம்பர் ஆகவே!
|
6
|
உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின் தேவர்களாகலாம். | |
அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர் எந்தையே! என, பந்தம் நீங்குமே.
|
7
|
அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும். | |
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர் ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!
|
8
|
காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள். | |
இருவர் நாடிய அரவன் அன்னியூர் பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.
|
9
|
திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர். | |
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த் தொண்டு உளார் வினை விண்டு போகுமே.
|
10
|
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும். | |
| Go to top |
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால், வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!
|
11
|
பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக. | |