சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநல்லம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=QK_9CQJKKMA   Add audio link Add Audio

கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1
இமையவர்கள் கல்லால மரநிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

2
தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும் ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

3
மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க முற்பட்ட ஊழிக்காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராதவினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான் நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ,
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்,
தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய்,
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே.

4
குளிர்ந்த பிறை மதியைச் சூடி கொன்றை மலர் களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினனாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு
பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித்
துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த,
நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

5
நீலமணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடைய வனும் மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும் எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத் துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.
Go to top

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை
ஈசன்! என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

6
மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடும் பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய் இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய் ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடிசெய்பவனாய் விளங்கும் இறைவன் நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

7
அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமை யம்மை காணக் கையில் அனல் ஏந்தி தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான் நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு
கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி,
நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே.

8
உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும் பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும் இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இரா வணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும் பகைவர்தம் முப்புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான் நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.

9
பாம்பணையில் துயிலும் திருமாலும் தண்ணிய தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும் திருமகள் கலைமகளிரோடு போகம் பொருந்திவாழ தானும் மலைமகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவ பிரான் நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர்,
அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே!
பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும்,
நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே.

10
குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப்போக்காதீர் புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற்கட்டிய பரமன் நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
Go to top

நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

11
நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்த ணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய கலைநலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர் கவலைகள் நீங்கப் பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநல்லம்
1.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நிழல் மேய கறை
Tune - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
5.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000