சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅம்பர்மாகாளம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=vgzGfOazfPA   Add audio link Add Audio

அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

1
பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும் நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும் வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

2
தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர் பிறைமதி கங்கை ஆகியவற்றை முடியில் சூடி வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.

திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

3
அலைகள் பொருந்திய கங்கை நதியோடு கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப்புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.

கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு,
மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய,
கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த,
எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே.

4
பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரிவண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசைவைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடையமாட்டா.

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய்,
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.

5
அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய துணிக்கப்பட்ட கோவணஉடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.
Go to top

பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

6
முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும் பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான் திருவடிகளைப் போற்ற குற்றங்கள் நம்மைக் குறுகா.

மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி,
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த,
தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே.

7
விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும் விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால் மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.

கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி,
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.

8
கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு அழகிய வில்லையும் கையில் ஏந்தி கரையோடு மோதும் நீர்நிரம்பிய அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும் இலைவடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.

சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட,
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா,
இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

9
சிறகுகளை உடைய வரிவண்டுகள் தேனுண்டு இசைபாட வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும் தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காணஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார்,
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல;
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா! என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

10
அழுக்கடைந்த மேனியரும் துன்ப வடிவினராகி மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும் சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்வாராது.
Go to top

வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-
திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர்
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.

11
அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅம்பர்மாகாளம்
1.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடையார் புரம் மூன்றும் அனல்வாய்
Tune - குறிஞ்சி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
2.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புல்கு பொன் நிறம் புரி
Tune - நட்டராகம்   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
3.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படியுள் ஆர் விடையினர், பாய்
Tune - சாதாரி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000