அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்; மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்; பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர் கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
|
1
|
கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும் விடை ஊர்தியினரும் முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும் ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும் அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும் வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும் எல்லோராலும் போற்றப்படும் புராணவரலாறுகளை உடையவரும் இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும் வலிமை சேர்ந்த கயிலை பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும். | |
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்; படுதலைக் கையர்; பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து எற்றிய கரைமேல் கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
|
2
|
மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகியமிடற்றை உடையவரும் கயிலைச் சிகரத்தில் உறைபவரும் உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும் முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும் அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண் இலவங்கம் சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும். | |
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்; நால் மறையாளர்; மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை; எட்டு இருங்கலை சேர் பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ, மதனனை வெகுண்ட கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
|
3
|
எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர் சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும். | |
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித் திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி, வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
|
4
|
ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித்திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும் வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும். | |
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்; பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு, ஒண்மணி வரன்றி, கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
|
5
|
ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால் மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள் முத்துக்கள் ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள் ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும். | |
| Go to top |
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த, பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி, கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
|
6
|
உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய் முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற வட்டமாக முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங்கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும் பொன்போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங் களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும். | |
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள் முத்து என அரும்ப, கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
|
7
|
மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும் தோணி மலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும் தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும். | |
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள் பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன, இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
|
8
|
தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன்முடிகளையும் வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்கு வதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும். | |
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம் பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறைகோயில் மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி, வெள் இப்பியும் சுமந்து, கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
|
9
|
கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும் மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான் விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில் வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும். | |
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச் சமணரும், தேரரும், கணி சேர் நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச் சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி வையகத்து ஏற்று, காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
10
|
இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும் எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர் தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும். | |
| Go to top |
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல், வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல் மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே.
|
11
|
ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம் உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும் வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை மெலிவைத்தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும் விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள். | |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|