சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஇடைச்சுரம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு இமயமடக்கொடியம்மை உடனுறை அருள்மிகு இடைச்சுரநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=eaRWjJFY0eM   Add audio link Add Audio

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

1
மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இள மயில்கள் ஆடுவதும் வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும் எரிபோன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில் வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச்சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்;
குழகு அலது அறியார்;
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள்
ஆடுவர்; கொன்றை அம்தாரார்;
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

2
வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில் கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய் அழகும் இளமையும் உடையவராய் கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய் நள்ளிருளில் திருநடம்புரிபவராய் கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும்
வாழ்த்தவும் படுவார்;
நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள
மஞ்ஞை மன்னிய பாங்கர்,
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

3
தூவி எரிக்கும் புழுகு சந்தனம் அகில் முதலிய வற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச்செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும் அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும் சுடலையையும் கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும் தீமை யில்லாதவரும் அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும் தீமை யில்லாதவரும் மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

கட மணி மார்பினர்; கடல் தனில் உறைவார் காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; வேறும் ஓர்
சரிதையர்; வேடமும் உடையர்;
வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, வாழையின் தீம்கனி
வார்ந்து தேன் அட்டும்
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

4
அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும் இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திரு இடைச்சுரத்தில் மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும் அன்புடையவரும் தீமையில்லாத வரும் கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும் பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறுவேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்;
வளர்மதி கதிர்விட, கங்கை-
நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ்
மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்;
சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல்
அனையன செங்குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

5
கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும் வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கைநீரை ஏற்ற சடையினரும் விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும் ஒளி விளங்கும் மழுப் படையை ஏந்தியவரும் அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய் சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ?
Go to top

தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின்
  ஆடுவர்; தோல் உடை ஆகப்
பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன்
  ஆடுவர்; பெரியவர் பெருமான்;
கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும்
மன்னிய பாங்கர்,
ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

6
தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப்பொடி பூசியவரும் தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும் பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க்கணங்களோடு ஆடுபவரும் பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங் காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப்பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?

கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு
கண்டியும் பூண்பர்;
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்;
ஆர் அணங்கு உடையர்;
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு
  இடைப் புணர்குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

7
வீரக்கழல் அணிந்த திருவடியினரும் கையில் வேலை ஏந்தியவரும் முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக்கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும் சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும் பாடுபவரும் பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசைபாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?

தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு
  சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்;
வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன
  மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

8
தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும் விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச்சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி வேறுபடும் புராணவரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய் சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது
பழி இலர், தாமும்;
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள்
  அடர்த்தது ஓர் தன்மையை உடையர்;
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ்
  இள மஞ்ஞை மல்கிய சாரல்,
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

9
பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும் பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும் விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய் மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும் இள மயில்கள் நிறைந்ததும் மேகங்கள் தவழும் சாரலை உடையதும் இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை
  அடியவர்க்கு அணியரும் ஆவர்;
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம்
  வயல் இளவாளைகள் இரிய,
எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

10
பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிறவண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும் தம் திருவடி நிழலை நின்று பரவிப்போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய் சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளை மீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?
Go to top

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச்
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள்
பரவி நின்று உருகு சம்பந்தன்,
புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர்
புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே.

11
நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில் சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன் அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர் பிணிகள் இன்றி வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஇடைச்சுரம்
1.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரி வளர் அவிர் ஒளி
Tune - குறிஞ்சி   (திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000