சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவண்ணாமலை - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=4pRXAcISp6o   Add audio link Add Audio

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

1
நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய அதனைக் கேட்டு அஞ்சிய காட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர் அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும் வானோர்கள் புகழ்ந்து போற்றவும் அழியாவரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.

மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே.

2
குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவரவரும் அழகிய சொற்களைப் பேசும்கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர் மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.

ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

3
இராப்போதில் பன்றிகளின் கூட்டமும் மான் இனங்களும் கரடிகளும் ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர் ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகமநூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

4
தன்னைவிட்டுப் பிரிந்த பெண்யானையைக் காணாத பெரிய கையைஉடைய மதம் பொருந்திய ஆண் யானை குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலைஉடைய திருவண்ணாமலை இறைவர் நூல்போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச்சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

5
பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர் உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணைஎய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.
Go to top

எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

6
மலைச்சாரலில் புல்மேய்க்கச் சென்ற ஆயன் கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்றுதிரளும் அடிவாரத்தை உடைய திரு வண்ணாமலை அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.

வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

7
விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும் பழமையான மலைப்பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரம னாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.

மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய்! என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

8
தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன் தன் வலிமையையும் பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, கொள்ள வம்மின்! என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

9
மலையை மூடி ஓங்கிவளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப்பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திரு வண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.

தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

10
தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலைமயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய் மலைச்சாரல்களில் சிங்கஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.
Go to top

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

11
இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய அருஞ்சொல்லமைப் புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune - புறநீர்மை   (திருவண்ணாமலை )
8.108   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருவண்ணாமலை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000