சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பிரமபுரம் (சீர்காழி) - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=dAki6LyATBw   Add audio link Add Audio

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

1
உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேதகீதங்களைப் பாடுபவனும் தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும்பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?

பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே
கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே?
இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!

2
இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும் பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?

நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே
பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!

3
இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும் அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண் மையான பிறைமதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன நெகிழும்படி செய்து போதல் நீதியோ?

சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!

4
கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித்தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?

தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,
துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!

5
மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி அனைத்திடங் களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில் அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய் காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா?
Go to top

கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!

6
அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க் கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழிநீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும் தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும் ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே இம்மண்ணுலகைக் கவரவந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச்சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியா?

முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே,
நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?
தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,
சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!

7
கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப் பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழைமீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன்கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?

எருதே கொணர்க! என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!

8
ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத்தேர் களை அழியுமாறு சண்டையிடும் தேர்வல்லவன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!

9
உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கிஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும் தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?

நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?
அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய
கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே!

10
உலகம் அழலாக வெதும்பி வருத்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக்கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப்பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடி திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?
Go to top

கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே?
நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!

11
ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழிபோகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால் அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத் தையும் அளித்து அம்முனிவனை வாழச்செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?

கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல
படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு
அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.

12
வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )
1.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இருக்குக்குறள் பதிகம், அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மொழிமாற்று பதிகம், காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.127   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏகபாதம் பதிகம், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.128   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )
2.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வழிமொழி பதிகம், சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஈரடி பதிகம், வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாலை மாற்று பதிகம், யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000