ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம் அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம், கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!
|
1
|
வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள் துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக. | |
பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர் இன்பத்தோடு அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு இல்லை; ஆன் ஏறு உடை மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
2
|
பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால் விடையேற்றை ஊர்தியாகவும் கொடியாகவும் உடையவனும் நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும் தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை. | |
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப் பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும் தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
3
|
இறக்கும் நாளும் வாழும் நாளும் பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும் குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும் கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும். | |
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம் மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர் மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
4
|
நிலையானநோய் பிறப்பு இறப்பு துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும் நிலையான வீடு பேற்றைப் பெறவும் தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும் உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய் வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக. | |
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால், வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம் உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய் துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
5
|
மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக. | |
| Go to top |
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன், பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும் தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
6
|
புலன் நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில் சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன்போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும் பழமையான புகழையுடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக. | |
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப் பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த் துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
7
|
குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும் முடியில் பிறை சூடியவரும் கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய் நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக. | |
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்! கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும், தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
8
|
பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக்கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக. | |
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம் வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண் தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
9
|
உடலை வருத்தும் நோய்களும் மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் மண்ணையும் விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காணமாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானைமாடப் பெருங்கோயிலைத் தொழுவீர்களாக. | |
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால், பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய, தவம் முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடிச் சொன்ன திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா; திருந்திழையும் தானும் பொருந்தி வாழும் துகள் தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
10
|
பெரும்பசி நலிய நோய்கள் வருத்துவதால் பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும் உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய் மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக. | |
| Go to top |
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான் கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய், விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.
|
11
|
மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும் கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும். | |