சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஓத்தூர் (செய்யாறு) - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு இளமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வேதநாதர் திருவடிகள் போற்றி
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://sivaya.org/audio/1.054 Poothernthaayina .mp3  https://www.youtube.com/watch?v=eDjeCtZ_l10   Add audio link Add Audio

பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

1
திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி வணங்காதார் இல்லை.

இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே! புள்ளிமான் உரி
உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே! உம தாளே.

2
திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்
கள்வீரே! உம காதலே!

3
ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை
ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே!

4
செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலைநாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.

குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை
உழை ஆள்வீர்! திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே!

5
குழையணிந்த காதினை உடையவரே கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடிநின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.
Go to top

மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்
நக்கீரே! அருள் நல்குமே!

6
திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே நீர் பலிகொள்ள வருங்காலத்து உம்திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக அவர் தமக்கு அருள் நல்குவீராக.

தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா! என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்
ஆதீரே! அருள் நல்குமே!

7
திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.

என்தான் இம் மலை! என்ற அரக்கனை
வென்றார் போலும், விரலினால்;
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே.

8
இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும் தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.

நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்
சென்றார் போலும், திசை எலாம்
ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!

9
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும் அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர். அவர்தம் அறிவுநிலை யாதோ?

கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்
தேரர், சொல் அவை தேறன் மின்!
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன், கழல் சேர்மினே!

10
கரிய நிறத்தவராகிய சமணர்களும் கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.
Go to top

குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை,
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.

11
திருவோத்தூரில் ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஓத்தூர் (செய்யாறு)
1.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
Tune - பழந்தக்கராகம்   (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000