சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சிரபுரம் (சீர்காழி) - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=jc-3lGGQv64   Add audio link Add Audio

பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

1
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியுள் எழுந்தருளிய இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் கொண்டுள்ள காரணம் யாதோ?

கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,
அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?

2
சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாள ரும் பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும் வழங்கத் தொலையாத செல்வவளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லையரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ ?

நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

3
வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும் மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும் அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று பலரிடமும் பலி கொள்வது ஏனோ?

கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

4
களையெடுப்போர் கைகளில் மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள் வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம் மேவிய இறைவனே! கைகளில் மான் கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?

புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?

5
மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலை மிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப்போர்த்த காரணம் யாதோ?
Go to top

கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?

6
ஆகவனீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம் பிதிர்யாகம் இருடியாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண்மழு பண் மூன்றுடைய வீணை பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?

குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?

7
சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இள மகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே குன்றாத வேட்கையோடு திரண்ட கைவளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.

மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!

8
கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இரா வணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே குற்றமற்றவனே தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே! கொள்கையனே என்று பாடம் இருக்கலாம். நிலை எடுத்த கொள்கை என்னே என்று பொருள் கொள்ளின் ஏனைய திருப்பாடல்களுடன் ஒக்கும்.

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

9
நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச் சேல்மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்
மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?

10
மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகிய புறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.
Go to top

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

11
தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகிவாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சிரபுரம் (சீர்காழி)
1.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பல் அடைந்த வெண் தலையில்
Tune - பழந்தக்கராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.109   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வார் உறு வனமுலை மங்கை
Tune - வியாழக்குறிஞ்சி   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அன்ன மென் நடை அரிவையோடு
Tune - நட்டராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000