சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமயிலாடுதுறை - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=NRSDFiUVZNg   Add audio link Add Audio

கரவு இன்றி நல்மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

1
நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மையுடையான் உகந்தருளும் இடமுமாம்.

உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம், சுரபுன்னையும், வன்னி,
மருவும் மயிலாடுதுறையே.

2
வலிமை பொருந்திய கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி குராமரம் சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர் வு
ஆன மயிலாடுதுறையே!

3
இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில் ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.

அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும், பிணி ஆயினதானே.

4
ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல் வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.

தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.

5
குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடை முடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.
Go to top

தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

6
தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும் தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித்துதிக்க வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.

அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

7
உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர் முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.

சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற,
வரம் கொள் மயிலாடுதுறையே.

8
பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,
கோலத்து அயனும், அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

9
உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்த திரு மாலும் அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர் அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.

நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

10
நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியாதவர்களாய் ஒழியத் தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.
Go to top

நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

11
ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன் தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல் களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமயிலாடுதுறை
1.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்
Tune - தக்கராகம்   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
3.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏன எயிறு, ஆடு அரவொடு,
Tune - சாதாரி   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
5.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொள்ளும் காதன்மை பெய்து உறும்
Tune - திருக்குறுந்தொகை   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000