சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புகலி -(சீர்காழி ) - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=rm_NWR-QZ3o   Add audio link Add Audio

விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

1
மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும் அதன்காரணமாக வந்த மரணமாய் அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம் தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும் தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

2
பகைவராய் மாறிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம் குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்.

வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

3
கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும் புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.

கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

4
கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார்மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.

காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

5
காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.
Go to top

வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

6
வெற்றி பொருந்திய சூலப்படை மான் மழு ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும் மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான் அடியார் குழாத்தோடு உறையும் பதி கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.

கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

7
மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்த வனும் கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.

தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

8
தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப்போற்ற அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவ பிரான் உறையும் இடம் தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.

மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

9
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும் திருமால் பிரமர் பொருட்டுத்தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.

உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

10
கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும் சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர் நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.
Go to top

இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

11
ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின் உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலி -(சீர்காழி )
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
Tune - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடை அது ஏறி, வெறி
Tune - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000