சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சோற்றுத்துறை - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு ஒப்பிலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ZZu2txUJeng   Add audio link Add Audio

செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1
நெஞ்சே முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு `யான் துய்ப்பேன்` என்னாது `அருளே துணையாக நுகர்வேன்` என்று கூற இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார் ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

2
பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பியாடிப் புலித்தோலும் முப்புரிநூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற இளமயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

3
சிவந்த திருமேனியரும் செம்மை நிறமுடைய சடைமுடியினரும் விடையூர்ந்து வருபவரும் கையில் பற்றிய சூலத்தினரும் வீரக்கழல் அணிந்தவரும் இடுகாட்டில் விளங்குபவரும் உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

4
நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே துணித்தலைச் செய்வதும் போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக.

பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

5
இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து நான்மறைகளை ஓதிக் கொண்டு சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும் வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.
Go to top

துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

6
உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பொருத்தமான தாளச்சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

7
காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து பொருத்தம் உடையவராய் வருபவரும் பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

8
ஒருபாகமாக உமையம்மையை உடையவரும் பிறையணிந்த சென்னியரும் தமது திருமேனியில் ஒருபாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும் இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க அவனது முனைப்பை அடக்கக் கால்விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

9
தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும் அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன் விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேதவிதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

10
நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது சிவாகம நெறி நின்று நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.
Go to top

அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

11
அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000