முந்தி நின்ற வினைகள் அவை போகச் சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்; அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.
|
1
|
நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய் மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவ பிரானாரைச் சிந்தனை செய்வாயாக. | |
மூவர் ஆய முதல்வர், முறையாலே தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர் ஆவர், என்னும் அடிகள் அவர் போலும் ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.
|
2
|
பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர் பிரமன் மால் உருத்திரன் ஆகிய மூவராயும் அவர்களுக்கு முதல்வராயும் தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர். | |
பங்கயங்கள் மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர், கங்கை தங்கு சடையார் அவர் போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே.
|
3
|
எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர் தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர். | |
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர், உரையின் நல்ல பெருமான் அவர் போலும் விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.
|
4
|
மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர் ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும் முத்துக்கள் நீர்த்திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார். | |
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர் அழகர் என்னும் அடிகள் அவர் போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே.
|
5
|
உலகோர் புகழ நிலை பெற்ற முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர் பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார். | |
| Go to top |
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல் திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.
|
6
|
விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர் கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும் செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார். | |
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும் தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர், ஆர நின்ற அடிகள் அவர் போலும் கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.
|
7
|
கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர் மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும் எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார். | |
மலை அதனார் உடைய மதில் மூன்றும் சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த் தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.
|
8
|
வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர் தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார். | |
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த் தேட நின்றார், உறையும் திருப் புன்கூர் ஆட வல்ல அடிகள் அவர் போலும் பாடல் ஆடல் பயிலும் பரமரே.
|
9
|
பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர் எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும் திருமாலும் தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார். | |
குண்டு முற்றிக் கூறை இன்றியே பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்! வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க் கண்டு தொழுமின், கபாலிவேடமே!
|
10
|
கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக. | |
| Go to top |
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன், சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர் நாட வல்ல ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பரவி வாழ்மினே!
|
11
|
மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய் எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன் பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக. | |