வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர், கங்கை தங்கும் முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே.
|
1
|
விரும்பத்தக்க தேன் விம்மிச்சுரந்துள்ள மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து அங்குத் தவழும் திங்களோடு பழகித்திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார். | |
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத் தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர், ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.
|
2
|
தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து அதனை அடக்கி அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில் அணிந்தவர் வேனிற்காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி உறையும் பெருமானார் ஆவர். | |
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட, தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர், ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும் தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.
|
3
|
தம்மை அடைக்கலமாக அடைந்த திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை உடைய இறைவர் நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத் திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர் தலவிருட்சம். | |
நாற விண்ட நறுமாமலர் கவ்வி, தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர், ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
|
4
|
ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவர் மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால் கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும் திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார். | |
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத் திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர், பசை விளங்கப் படித்தார் அவர் போலும் வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.
|
5
|
கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர் புகழால் விளக்கம் பெற்றதும் இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும் நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில் தம்மை வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார். | |
| Go to top |
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி, தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர், ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.
|
6
|
வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய இறைவர் வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு தெளிந்த தன்மை உடையதாய்த் தண்ணீர் பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார். | |
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும் செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர், தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.
|
7
|
கருமை பொருந்திய நஞ்சு மருவும் மிடற்றினராய இறைவர் நெய்தல் ஆம்பல் செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து நிறைந்து விளங்கும் திருப்புத்தூரில் எழுந்தருளிய உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவார். | |
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத் திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவர் அவர் போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
|
8
|
இராவணனாகிய அரக்கனைக் கால்விரலால் தளர அடர்த்தவராகிய பெருமானார் மேகங்களிலும் பரவிக் கமழும் மணமுடைய பொழில்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றதும் செல்வம் நிறைந்ததும் செம்மையாளர் வாழ்வதும் திருவிழாக்கள் பல நிகழ்வதுமாய திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்க வல்லவராய இறைவராவார். | |
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமான் அவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
|
9
|
பிரமனும் திருமாலும் அறியமுடியாத பெரியோனாகிய இறைவன் எங்கும் பொருந்தியனவாய் வளரும் இள மயில்கள் தெருக்கள் தோறும் உலவிக்களிக்கும் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய் வாழும் பெருமானாவான். | |
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல் தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர், ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
|
10
|
மேல் ஆடையைப் போர்த்துத் திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர் ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த் திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய அவரைத்தெளிமின். | |
| Go to top |
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் அல்லல் தீரும்; அவலம் அடையாவே.
|
11
|
நன்மை தரும் வேதங்களை உணர்ந்த ஞான சம்பந்தன் செல்வரும் உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச் சொல்லிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா. | |