சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமறைக்காடு (வேதாரண்யம்) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு மறைக்காட்டீசுரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=YOg1emjAI5A   Add audio link Add Audio

சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

1
மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள் உடையினன்-
இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில் பெற வளர்,
மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.

2
கைகள் முதலிய அவயவங்களில் கொடிய விடம் பொருந்திய பாம்புகளைத் தொன்று தொட்டுவரும் வரன் முறைப்படி வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும் கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய பெருமான் இரவலர்களின் வறுமைத்துயர் போக எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும் கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும் மறைவனம் அமர்பரமன் ஆவான்.

இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

3
அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும் குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள் பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.

நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

4
அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர் கபாலம் ஊமத்தை கங்கை நதி படஅரவு பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான் பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள் தவம் முயலும் முனிவர்கள் ஆகியோர் தன்னை வழிபட அவர்கள் மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம் உறையும் பரமன் ஆவான்.

கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு
பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.

5
நடை அழகுடன் தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற அதனை உரித்தருளிய மிக்க குணாளனும் உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான் பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும் விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும் மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும் தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.
Go to top

கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,
முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம்,
உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.

6
குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம் வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம் கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான் முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை முடைநாறும் பிரமகபாலம் முகிழ் போலும் கூரிய கணிச்சி வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும் தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப்பெறுபவனுமாகிய சிவபிரான் மறை வனத்தில் உறையும் பரமன் ஆவான்.

இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை முழுவதும் கெட,
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன்-இனமலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.

7
பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க நீர் எரியில் ஒடுங்க எரி வளியில் ஒடுங்க வளி ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன் வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்-
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

8
மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர் வாழ்நாள் தேர் வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து
பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.

9
அழகிய மலர்மகள் கேள்வனும் அயனும் அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல் செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல் திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர் ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும் மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.

இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.

10
உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும் துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன் அழகிய வயலில் சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.
Go to top

வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

11
குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சிலை தனை நடு இடை
Tune - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
Tune - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோளறு பதிகம், வேய் உறு தோளி பங்கன்,
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
2.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
3.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல் பொலி சுரத்தின் எரி
Tune - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
Tune - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
Tune - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் மால் கடல் பரவி
Tune - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
Tune - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
6.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் அனைய சோதி
Tune - திருத்தாண்டகம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
7.071   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   யாழைப் பழித் தன்ன மொழி
Tune - காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000