சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சிவபுரம் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாயகர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Sa2JXIHZsfQ   Add audio link Add Audio

புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

1
விண் காற்று தீ நீர் மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும் முக்குணங்களையும் விரும்பத்தக்க மார்க்கங்களையும் வானுலகில் வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும் தம்முடைய படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரைமலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத்தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.

மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

2
மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள் விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.

பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.

3
பழுதுபடாத கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும் அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர் ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுரநகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.

நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.

4
மணம் மிகுந்த சந்தனம் அரும்புகள் இதழ் விரிந்த மலர்கள் குங்கிலியம் சீதாரி முதலிய தூபம் ஒளி வளர் தீபங்கள் நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும் மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர் குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.

சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.

5
காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில் காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும் தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர் மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர் கலைமகள் தன் அருளைத் தர வாழ்வர்.
Go to top

சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.

6
வேதங்களையும் பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும் குற்றம் அறப் பயின்று உலகியலில் பழி பாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை,
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.

7
திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.

அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.

8
உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.

அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.

9
வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப்பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள் அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம் உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.

குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல,
திணம் எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.

10
குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும் காணப்படும் உலகப் பொருள்களும் உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின இது திண்ணம் எனவும் கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும் தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும் உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைப்பவர் அழகிய உருவோடு விளங்குவர்.
Go to top

திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

11
இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம் நிலம் நிறைந்த செல்வம் அழகிய வடிவம் ஒப்பற்ற கொடை வண்மை மிக்க வெற்றித்திரு இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சிவபுரம்
1.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புவம், வளி, கனல், புனல்,
Tune - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்குரல் இசை கெழும் யாழ்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.125   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை மலி அகல் அல்குல்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
6.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000