தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு, அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.
|
1
|
பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத்தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும் விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம் நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும். | |
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்; உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.
|
2
|
மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும் புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம் பெரிய அலைகளை உடைய கடற்கரை மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும். | |
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு, சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.
|
3
|
மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான்உறையும் தலம் கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள் வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும். | |
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
|
4
|
பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெருவலி படைத்தவனும் நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும் வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும். | |
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள் பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி, திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.
|
5
|
அழகிய கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும் சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம் ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும். | |
| Go to top |
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல் விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து, அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.
|
6
|
குற்றமற்ற வலிய வேடர் உருவைக் கொண்டு நினைதற்கும் அரிய கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத பாசுபதக் கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி செறிந்த மரங்கள் திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை யாகும். | |
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல், மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி திலகம் இது! என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.
|
7
|
நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஓதி ஆற்று நீர் மணப்புகை தீபம் மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும் பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும். | |
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்; வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.
|
8
|
சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும் வரன் முறையால் உலகைப்படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழிவழுவியதால் ஐந்தாயிருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலையாகும். | |
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை, சய சய! என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.
|
9
|
நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும். | |
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர், திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.
|
10
|
பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப்புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும் விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத்தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும். | |
| Go to top |
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும் மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள், இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.
|
11
|
சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள் கலைமகள் சயமகள் அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால் பொருந்த பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர். | |