சூலம்படை; சுண்ணப்பொடி சாந்தம்,சுடு நீறு; பால்அம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக் காலன்வலி காலினொடு போக்கி,கடி கமழும் நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.
|
1
|
முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும் சாந்தமும் திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடை முடியின் மேலது. | |
அச்சம்இலர்; பாவம்இலர்; கேடும்இலர்; அடியார், நிச்சம்உறு நோயும்இலர் தாமும் நின்றியூரில் நச்சம்மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும் பச்சம்உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.
|
2
|
நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும் மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும் தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம் பாவம் கேடு நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர். | |
பறையின்ஒலி சங்கின்ஒலி பாங்குஆரவும், ஆர அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்அவர் தன்மை; நிறையும்புனல் சடைமேல் உடைஅடிகள், நின்றியூரில் உறையும்இறை, அல்லதுஎனது உள்ளம் உணராதே!
|
3
|
பறையடிக்கும் ஒலி சங்கு முழங்கும் முழக்கம் பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாததத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது. | |
பூண்டவரை மார்பில்புரி நூலன்,விரி கொன்றை ஈண்டஅத னோடுஒரு பால்அம்மதி அதனைத் தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றிஅது தன்னில் ஆண்டகழல் தொழல்அல்லது, அறியார்அவர் அறிவே!
|
4
|
அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத்தொழுதல் அல்லது அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார். | |
குழலின்இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும் நிழலின்எழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில், அழலின்வலன் அங்கையது ஏந்தி,அனல் ஆடும் கழலின்ஒலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
|
5
|
குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும் நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத்திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக்களைகண் ஆவான். | |
| Go to top |
மூரல்முறு வல்வெண்நகை உடையாள்ஒரு பாகம், சாரல்மதி அதனோடுஉடன் சலவம்சடை வைத்த வீரன்,மலி அழகுஆர்பொழில் மிடையும்திரு நின்றி யூரன்,கழல் அல்லாது,என துஉள்ளம்உண ராதே!
|
6
|
புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது. | |
பற்றிஒரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும் பெற்றிஅது ஆகித்திரி தேவர்பெரு மானார், சுற்றிஒரு வேங்கைஅத ளோடும்பிறை சூடும் நெற்றிஒரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.
|
7
|
பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடியவரும் நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார். | |
நல்லமலர் மேலானொடு ஞாலம்அது உண்டான், அல்லர்என, ஆவர்என, நின்றும்அறிவு அரிய நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை ஆர்எம் செல்வர்அடி அல்லாது,என சிந்தைஉண ராதே!
|
8
|
நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும் சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது. | |
நெறியில்வரு பேராவகை நினையாநினைவு ஒன்றை அறிவுஇல்சமண் ஆதர்உரை கேட்டும்அய
ராதே, நெறிஇல்லவர் குறிகள்நினை யாதே,நின்றி யூரில் மறிஏந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே!
|
9
|
சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும் தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்தியகையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும். | |
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும்நெரிவு ஆக நின்றுஅங்கு ஒருவிரலால்உற வைத்தான்நின்றி யூரை நன்றுஆர்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்லக்குறைவு இன்றிநிறை புகழே.
|
10
|
கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும். | |
| Go to top |