மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான், கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன், செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!
|
1
|
கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும் மலைமகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும் துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ்பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக. | |
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்; பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர் அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல், நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!
|
2
|
காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க. ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும் பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும் மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும் பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும். | |
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான், வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான், தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன், நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!
|
3
|
ஊழிக்காலத்து பேய்கள் பாட மகா நடனம் ஆடிய பெருமானும் மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமையம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும் அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய்போன்ற தலைவனும் அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக. | |
சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி, நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம் கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான், நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!
|
4
|
சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும் கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக. | |
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி, பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும், நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான- நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.
|
5
|
நுகரத்தக்க பொருளாகிய சந்தனம் ஏலம் மணி செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வதுபோல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும் ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா. | |
| Go to top |
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும் உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய, புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.
|
6
|
இடபக் கொடியை உடைய அண்ணலும் மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும் அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார். | |
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித் தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.
|
7
|
பயிர் செழித்து வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில் தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக்கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர். | |
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி, நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ, கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.
|
8
|
அழகிய கயிலாயமலையைத் தன் இருபது முன்கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஒசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே ஒருவற்கு அடையத்தக்க கதியாம். | |
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும், சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம், காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும் ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.
|
9
|
அழகிய முடியை உடைய திருமாலும் கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா. | |
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர், புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்! நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.
|
10
|
சித்தத்தில் செருக்குடையவரும் சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும் புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு குற்றமற்ற சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப்போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும் நோய்கள் அடையா. | |
| Go to top |
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார், சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.
|
11
|
தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவ வல்லவர் புண்ணிய வாய்ப்புடைய சிலவே நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர். | |