சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Hdfawt2XBvU   Add audio link Add Audio

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

1
மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற அதனை உண்டவனும் பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும் எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

2
தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான் போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம் மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்
தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

3
உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம் ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.

4
தேவர்களும் சிறந்த தவத்தை மேற்கொண்டவர்களும் கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும் மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்டு வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்
கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

5
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக் கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில் முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.
Go to top

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு
ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,
மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.

6
அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம் சாவாமை பெற்றவர்களும் மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும் மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும் மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,
மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.

7
தழலை ஒத்த சிவந்த திருமேனியரும் பிறைமதி அணிந்த சடைமுடியினரும் இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும் வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில் விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

8
பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும் தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-
புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

9
தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள் நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள் நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல்மீன்கள் துள்ளிப்பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

10
சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும் இமவான் மருகனும் தோன்றும் இடபக் கொடி உடையோனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் மலர் சூடிய கரியகூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப்பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.
Go to top

முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

11
மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலிநகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.131   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
2.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.025   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org