சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பிரமபுரம் (சீர்காழி) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Yq-NOZQxd64  https://www.youtube.com/watch?v=aMbVA3-pBEY  https://www.youtube.com/watch?v=awJj7vVhUOk   Add audio link Add Audio

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய் விடை மீது ஏறி ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன் படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

2
வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும் இளமையான நாகத்தையும் பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன் கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

3
கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

4
வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல் விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

5
ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும் சடை முடியை உடையவன் என்றும் விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.
Go to top

மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

6
ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் இருள்செறிந்த மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

7
சடையில் கலந்த கங்கையை உடையவனும் திருக்கரத்தில் அனலை உடையவனும் ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன் கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும் குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும் தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும் ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

8
கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன் துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

9
திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும் தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய் என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன் ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

10
புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
Go to top

அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

11
அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும் அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும் இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )
1.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இருக்குக்குறள் பதிகம், அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மொழிமாற்று பதிகம், காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.127   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏகபாதம் பதிகம், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.128   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )
2.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வழிமொழி பதிகம், சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஈரடி பதிகம், வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாலை மாற்று பதிகம், யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000