தண்ணியல் வெம்மையினான் தலை யிற்கடை தோறும்பலி பண்ணியன் மென்மொழியா ரிடங் கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறை யாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
1
|
வலங்கிளர் மாதவஞ்செய் மலை மங்கையொர் பங்கினனாய்ச் சலங்கிளர் கங்கைதங்கச் சடை யொன்றிடை யேதரித்தான் பலங்கிளர் பைம்பொழில்தண் பனி வெண்மதி யைத்தடவ நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
2
|
கச்சியன் இன்கருப்பூர் விருப் பன்கரு திக்கசிவார் உச்சியன் பிச்சையுண்ணி உல கங்களெல் லாமுடையான் நொச்சியம் பச்சிலையான் நுரை தீர்புன லால்தொழுவார் நச்சிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
3
|
பாடிய நான்மறையான் படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான் அடி போற்றியென் றன்பினராய்ச் சூடிய செங்கையினார் பலர் தோத்திரம் வாய்த்தசொல்லி நாடிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
4
|
பிலந்தரு வாயினொடு பெரி தும்வலி மிக்குடைய சலந்தரன் ஆகம்இரு பிள வாக்கிய சக்கரம்முன் நிலந்தரு மாமகள்கோன் நெடு மாற்கருள் செய்தபிரான் நலந்தரு நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
5
|
| Go to top |
வெண்பொடி மேனியினான் கரு நீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடையான் பிர மன்சிரம் பீடழித்தான் பண்புடை நான்மறையோர் பயின் றேத்திப்பல் கால்வணங்கும் நண்புடை நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
6
|
தொடைமலி கொன்றைதுன்றுஞ் சடை யன்சுடர் வெண்மழுவாட் படைமலி கையன்மெய்யிற் பகட் டீருரிப் போர்வையினான் மடைமலி வண்கமலம் மலர் மேன்மட வன்னம்மன்னி நடைமலி நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
7
|
குளிர்தரு திங்கள்கங்கை குர வோடரக் கூவிளமும் மிளிர்தரு புன்சடைமேல் உடை யான்விடை யான்விரைசேர் தளிர்தரு கோங்குவேங்கை தட மாதவி சண்பகமும் நளிர்தரு நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
8
|
கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழற்பின் கானவனாய் அமர்பயில் வெய்தி அருச் சுனற்கருள் செய்தபிரான் தமர்பயில் தண்விழவில் தகு சைவர்த வத்தின்மிக்க நமர்பயில் நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
9
|
கருவரை போல்அரக்கன் கயி லைம்மலைக் கீழ்க்கதற ஒருவிர லால்அடர்த்தின் னருள் செய்த வுமாபதிதான் திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை வன்திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
|
10
|
| Go to top |
கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங் கோயில்ந யந்தவனைச் சேடியல் சிங்கிதந்தை சடை யன்திரு வாரூரன் பாடிய பத்தும்வல்லார் புகு வார்பர லோகத்துளே
|
11
|