வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே. |
1
|
உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே. |
2
|
முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே. |
3
|
நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே. |
4
|
முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற் 1 பெருஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே. |
5
|
| Go to top |
விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே. |
6
|
பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே. |
7
|
வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே. |
8
|
சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே. |
9
|
என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப ரிகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே. |
10
|
| Go to top |