விருது குன்றமா மேருவில் நாணர வாஅனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே. |
1
|
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே. |
2
|
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே. |
3
|
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே. |
4
|
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே. |
5
|
| Go to top |
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே. |
6
|
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தீச்சர மதுதானே. |
7
|
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே. |
8
|
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே. |
9
|
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே. |
10
|
| Go to top |
மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள் பரகதி பெறலாமே. |
11
|