எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
1
|
ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
2
|
பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
3
|
துன்னவாடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லா ல் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே |
4
|
வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
5
|
| Go to top |
உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
6
|
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
7
|
செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
8
|
நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
9
|
சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. |
10
|
| Go to top |
கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே. |
11
|